:: குறையெலாம் தீர்ந்திட குழுமணிக்கு வாருங்கள் ::
   குழுமணி அக்ரஹாரத்தில் நுழையும் போதே நம்மை வரவேற்கிறது. ஸ்ரீ அன்னையின் ஆலயம். எல்லோரும் வாருங்கள், இன்புற்றிருங்கள் என்று சொல்வது போல திருக்கோவிலின் பெரிய வாயிற்படி. நிலைக்கு மேலே இரண்டு யானைகள் புடைசூழ ஸ்ரீ கஜலெட்சுமி திருஉருவம். அடுத்து வலம்புரி ஸ்ரீ விநாயகர் சன்னதி, ஸ்ரீ வலம்புரி விநாயகரின் பின்புறம் ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவின் நேர் பார்வையில் இருபத்தைந்து துவாரங்கள். இதன் தாத்பிரியம் என்ன. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மறு உரு! ஆம் பத்து பிறவிகளில் செய்த பாவங்கள் நீக்கப்பட்டு புனிதராக தாய் அருள்பார்வை உதவுகிறது. அடுத்து பதினைந்து துவாரங்கள் மாதத்தில் இரண்டு பட்சங்கள். ஒவ்வொரு பட்சத்திருக்கும் உரிய பதினைந்து நாட்களில் ஸ்ரீ அம்பாளை தரிசிப்பவர்கள், அம்பாளின் பரி பூரண அருளைப் பெற்று, இவ்வுலக வாழ்வில் தேவையான தனம், தானியம், கல்வி, நல்மனம், நோயற்ற உடல், போன்ற பதினாறு பேறுகளை பெருபவர் என்பது .

   சன்னதியின் பின்சுவற்றில் இருபத்தைந்து துவாரங்கள் (இந்த இருபத்தைந்து துவாரங்கள் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களின் மறு உரு) இதன் வழியே வருகிறவர்களை பார்க்கிறாள் ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவி விக்னங்கள் தீர சாந்தஸ்வரூபியாய் வீற்றிருக்கும் ஸ்ரீ விநாயகரை வணங்குகிறோம்.

    அடுத்து அன்னையின் ஸிம்மவாஹனம் பலிபீடம். எதிரே கலைநயமிக்க மூலஸ்தானம். அதில் ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவி. அவள் பெயரிலேயே 'ஜெயம்' இருக்கின்றது. இவளை தரிசிக்க வருகிறவர்களின் எண்ணங்கள் எல்லாமே ஜெயம்தான். 'மங்களம்' அவள் அடுத்த பெயரின் அடுத்த சொல். வருகின்ற பக்தர்களின் இல்லங்களில் மங்களம் நிறையும். மஹாப் பிரத்யங்கிரா தேவி சக்தி இவள். அன்னையின் வலதுபுறமும், இடதுபுறமும் ஜெயா, விஜயா என்ற இரு சக்திகள் நின்று நம்மை அமைதிப்படுத்துகின்றனர். ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவி யை சரணடைந்து சகலவரம் பெற்றுச் செல்லுங்கள் என்று ஜெயா, விஜயா கூறுவது மனதில் புரிகிறது. நிமிர்ந்து பார்க்கிறோம். பிரம்மாண்டமான திருவாசி. சுடர்விடும் தீப வரிசை ஆஜானுபாகுவான ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவி யின் திருஉருவம். காணக் கண்கோடி வேண்டும். ஸ்ரீ சரபேஸ்வரரின் இரண்டு இறக்கைகளில் ஒன்றாகத் தோன்றியவள் இவள். சௌம்யமான அழகும் கோர உருவமும் நமக்குள் அன்பையும், பாசத்தையும், அன்யோன்யத்தையும், மனதெம்பையும், மனத் தெளிவையும் ஊட்டுகின்றன. கம்பீரமான விஸ்வரூபம். சிரசின் மேல்புறம் நிழற்குடையாய் ஆதிசேஷன். அடியவர்களுக்கு வாரி வழங்கிட நான்கு திருக்கரங்கள். கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம், தவழ்கின்றன. கூப்பிட்டவுடன் ஓடிவரத் தயாராய் உள்ள பாசமிகு நின்ற உருவம். சீறிப்பாந்து, அடியவர்க்கு உதவ ஏறிச் செல்ல சிம்ம வாகனம். பில்லி, சூன்யம், பெரும்பகை, போக்கிட திரிசூலம்.

   "என் பக்தன் இவன், இவனிடம் வராதே" என்று எதிரிகளை எச்சரிக்க டமருகம். 'என் பக்தர்களைத் துன்பப்படுத்தியவர்களின் கதி, என்று காட்டிட கபாலம். பாசத்தோடு அரவணைக்க பாசம். அம்பாளின் பார்வை வடதிசை நோக்கி உள்ளது. அவளுடைய மூன்று பக்கங்களிலும் ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ ஜயமங்களா, ஸ்ரீ வாக்தேவி ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர். பிரத்யங்கிரஸ், அங்கிரஸ் என்ற இரண்டு முனிவர்களின் திரு உருவம். இந்த முனிவர்களின் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு உரிய மந்திரங்கள் உருவாக்கியவர்கள். அதனாலதான் இந்த இரு முனிவர்களின் பெயர்களையே தனக்கு 'பிரத்யங்கிரா' என்று நாமமாகத் தரித்துப் பெருமைபடுத்துகிறாள் திருக்கோவிலை வளம் வரும்போது சீதாபிராட்டியால் என்றும் சிரஞ்சீவியாய் இருந்து உன்னை நாடி வருவோருக்கு நல்லருள் தருக என்று ஆசிபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர். ஒருவர் அல்ல இருவர் காட்சி தருகிறார். முதலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், அடுத்து ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர். திருக்கோவிலில் வளம் வந்து நிமிர்கிறோம். நமக்குள் ஓர் புத்துணர்வு. நெகிழ்வு புரிதல் குணம், நம்பிக்கை ஒளி.   

   அமாவாசை நன்னாளில் காலையில் ஸ்ரீ அம்பாளுக்கு அபிஷேகம், மாலையில் ஸ்ரீ பிரத்யங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. விஷேச நாட்களில் முத்தங்கி சேவை, தங்க தங்க கசத்துடன் ஸ்ரீ அம்பாள் தரிசனம் தருகிறாள். 1991 ஆண்டு ஸ்ரீ குருஜி கல்யாண ராம பட்டாச்சாரியார் அவர்களால் உற்சவமூர்த்தி நிறுவப்பட்டு, 2007 மூலஸ்தானதேவி பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா ஸம்ரோஷனம் நடைபெற்றது.